அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பங்குசந்தை "நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன" என்றும், கெளதம் அதானியின் வணிக சாம்ராஜ்யத்தைப் பற்றிய சர்ச்சை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றும் செய்தியாளர்களிடம் இன்று(பிப் 3) கூறினார். அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட பங்குகளின் ஒருங்கிணைந்த மதிப்பு $120 பில்லியனுக்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது. இது அதானி குழுமத்தின் மொத்த மதிப்பில் பாதியாகும். அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், அதிக கடன் வைத்திருக்கும் நிறுவனம் என்றும் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க "வரி ஏமாற்று புகலிடங்களை" பயன்படுத்தும் நிறுவனம் என்றும் அதானி குழுமத்தை விமர்சித்திருந்தது. மேலும், பங்குகளை கையாளுதல், கணக்கியல் மோசடி போன்ற குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
LIC, SBI முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்களா?
அதானி குழுமம் ஹிண்டன்பர்க் அறிக்கையை "தவறான தகவல்" என்றும் "ஆதாரமற்ற மற்றும் மதிப்பிழந்த குற்றச்சாட்டுகளின் தீங்கிழைக்கும் கலவை" என்றும் விமர்சித்திருந்தது. இந்தியா "நன்கு நிர்வகிக்கப்படும்" நாடாகவும், "நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட பங்குசந்தையாகவும்" இருந்து வருகிறது என்று நிதியமைச்சர் நியூஸ்18 செய்திகளிடம் கூறியுள்ளார். அதானி குழுமத்தின் பங்கு சரிவு, பொதுத்துறை நிதி நிறுவனங்களைப்(LIC, SBI போன்றவை) பாதிக்காது என்று அந்த நிறுவனங்கள் ஏற்கனவே விரிவான அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும், குறைந்த சதவீதம் மட்டுமே அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பதால் பங்குசரிவால் அவை பாதிக்கப்படாது என்றும் நிர்மலா சீதாராமன் கூறி இருகிறார். "முதலீட்டாளர்களுக்கு முன்பு இருந்த நம்பிக்கை, இனியும் தொடரும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.