"உச்சநீதிமன்றத்தில் இருந்து கூட ஜாமீன் கிடைக்கவில்லை': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி
எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி காட்சிகளை இன்று கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி, தன் மீதான தாக்குதல் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்தாது என்றும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது என்றும், ஊழலில் ஈடுபடுவோர் மீது அந்தஸ்து பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். "ஊழலுக்கு எதிராக மோடி முழு பலத்துடன் போராடும் போது, இவர்கள் 'இண்டியா' கூட்டணியை உருவாக்கி உள்ளனர். மோடியை மிரட்ட நினைக்கிறார்கள், ஆனால் என்னை பொறுத்தவரை எனது பாரதம் எனது குடும்பம், அதை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்." என்று மக்களவைத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகு உத்தரப் பிரதேசத்தில் தனது முதல் பேரணியில் பிரதமர் இன்று உரையாற்றினார்.
"ஊழலுக்கு எதிரான போர்": பிரதமர் மோடி
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் ஆகியோருக்கு ஆதரவாக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி கட்சிகள் இன்று ஒரு மாபெரும் பேரணியை நடத்தினர். இந்நினையில், இன்று மாலை பிரதமர் மோடி இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் சிலர் கொந்தளிக்கின்றனர் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். "ஊழல்காரர்களிடமிருந்து எனது நாட்டைக் காப்பாற்ற நான் ஒரு பெரிய போரை நடத்தி வருகிறேன். அதனால்தான் அவர்கள் இன்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார்கள், உச்ச நீதிமன்றத்தில் இருந்து கூட அவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.