வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து- 4 பேர் பலி, 100 பேர் காயம்
டெல்லி-காமாக்யா வடகிழக்கு எக்ஸ்பிரஸ் பீகாரில் நேற்று இரவு தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பீகாரின் புக்சார் மாவட்டத்தின் ரகுநாத்பூர் ரயில்வே நிலையம் அருகே நேற்று இரவு 9.35 மணியளவில் ரயிலின் 21 பெட்டிகள் தடம்புரண்டது. 23 பெட்டிகளை கொண்ட வடகிழக்கு எக்ஸ்பிரஸ், டெல்லியின் ஆனந்த் விஹார் முனையத்திலிருந்து கௌஹாத்தி அருகே காமாக்யாவிற்கு தனது 33 மணி நேர பயணத்தை நேற்று காலை 7:30 மணிக்கு தொடங்கியது. "ரயில் சாதாரணமான வேகத்தில் வந்து கொண்டிருந்தது. திடீரென பெரும் சத்தம் கேட்டது. நாங்கள் அருகில் சென்று பார்த்த போது ரயில் தடம்புரண்டு இருந்தது. ஏசி பெட்டிகள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தன" என விபத்தை நேரில் பார்த்தவர் பிடிஐயிடம் கூறியிருந்தார்.
போர்க்கால அடிப்படையில் நடைபெற்ற மீட்பு பணி
வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட சில மணி நேரங்களில் மீட்பு பணிகள் முடிக்கப்பட்டு, தண்டவாளங்கள் சரி செய்யும் பணி தொடங்கப்பட்டு விட்டதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். ரயில் தடம் புரண்டதற்கான மூல காரணம் கண்டுபிடிக்கப்படும்" என பதிவிட்டு இருந்தார். இந்த விபத்தைத் தொடர்ந்து இரண்டு ரயில்கள் முற்றிலுமாக ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 21 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.