பொன்முடி வழக்கில் வருமான வரி செலுத்தாதது தான் காரணம் என திமுக சட்டத்துறை செயலாளர் விளக்கம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக சட்டத்துறை செயலாளரும், பொன்முடி சார்பில் வாதாடிய வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் பழிவாங்கும் எண்ணத்தோடு தொடுக்கப்பட்ட வழக்கு இது. அமைச்சர் பொன்முடி குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கப்பட்டு சிறப்பு நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது. இவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டதில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று கூறி, தண்டனையினை அறிவித்துள்ளது என்று கூறியுள்ளார்.
'உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் நிச்சயம் பொன்முடி விடுதலை செய்யப்படுவார்' - என்.ஆர்.இளங்கோ
மேலும் அவர், 'இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் நிச்சயம் பொன்முடி குற்றவாளி இல்லை என்று நிரூபணமாகி விடுதலை செய்யப்படுவார் என்று நம்புகிறோம்' என்று கூறியுள்ளார். ஏன் என்றால், வழக்கு தொடுக்கப்பட்டபோதே, ரூ.4,80,000 தான் கணக்கில் வராத பணமாக காட்டப்பட்டது. ஆனால் அவரது மனைவி வெற்றிகரமாக பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவருக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி வருவாய் வருகிறது என்பதை குறிக்கும் வகையில் வருமான வரி மற்றும் வங்கிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பொன்முடியின் மனைவி தனது வருமான வரியினை சரியாக செலுத்தாத காரணத்தினால் தான் சந்தேகத்தின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது என்றும் அவர் கூறினார்.
பொன்முடி மனைவி ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என தகவல்
தொடர்ந்து, 1996-2001ல் பொன்முடி மீது வேறொரு வழக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி பதிவாகியிருந்தது. அதன் விசாரணையிலும், அவரது மனைவிக்கு சித்தூரில் 100 ஏக்கர் குடும்ப சொத்து உள்ளது, அவரது சகோதரர் முதலீடு செய்திருப்பது உள்ளிட்டவை நிரூபிக்கப்பட்டது. ஆனால் அந்த வழக்கின் தீர்ப்பில் இந்த நிரூபணங்கள் ஏதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆனால் இந்த வழக்கில் அவரது மனைவி ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் என்பதை வருமான துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும் வருமான வரி செலுத்தாத ஒரே காரணத்தினால் தான் அவரது விடுதலை ரத்து செய்யப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
'பாஜக கட்சியில் பலரது ஊழல் வழக்குகள் வெளிச்சத்திற்கு வரும்' - வழக்கறிஞர்
மேலும், 'சென்னை உயர்நீதிமன்ற தண்டனையினை உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீடு வழக்கில் நிறுத்திவைக்க முயற்சிப்போம்' என்றும், 'அவ்வாறு நிறுத்திவைக்கப்பட்டால் தகுதி இழப்பு எதுவும் இல்லாமல் ஆகிவிடும்' என்றும் வழக்கறிஞர் இளங்கோ கூறுகிறார். "திமுக மிக வலுவாக உள்ளது, அதனை கண்டு பாஜக அஞ்சுகிறது" என்று குறிப்பிட்ட வழக்கறிஞர், "2024 தேர்தலுக்கு பிறகு பாஜக கட்சியில் பலரது ஊழல் வழக்குகள் வெளிச்சத்திற்கு வரும்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.