சைலேந்திர பாபுவின் டின்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான பரிந்துரையை நிராகரித்த ஆளுநர்
தமிழ்நாடு முன்னாள் காவல்துறை டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி.,தலைவர் பதவிக்கு தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில் அதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டின்பிஎஸ்சி) தலைவர் பதவியிலிருந்த பாலச்சந்திரன் கடந்த 2002ம்.,ஆண்டு ஓய்வுப்பெற்றார். அதன்பின்னர் அந்த தேர்வாணைய உறுப்பினராகவிருந்த முனியநாதன் என்பவர் தான் தற்போது வரை துணை தலைவராக பதவி வகித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. புதிதாக தலைவர் நியமிக்காமல் உள்ளதால் தேர்வாணைய தேர்வுகள் மற்றும் அதன் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற டிஜிபி.,சைலேந்திர பாபுவை தலைவர் பதவிக்கு நியமிக்க முடிவு செய்த அரசு அதற்கான ஒப்புதல் கோரி கடிதம் ஒன்றினை ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.
தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை - ஆளுநர்
இதனை தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கான தேர்வுகள் உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல் படி நடத்தப்பட்டதா? எந்த முறையில் நடைபெற்றது? இதில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் என்னென்ன? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி கவர்னர் மாளிகையிலிருந்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. அதற்கான பதில் கடிதத்தை தமிழக அரசு மீண்டும் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் முன்னாள் தமிழக காவல்துறை டிஜிபி.,சைலேந்திர பாபுவின் நியமன பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் தேர்வு முறையில் வெளிப்படை தன்மை இல்லை என்று கூறியுள்ள அவர், இப்பதவிக்கு வேறு ஒருவரை நியமனம் செய்ய பரிந்துரை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.