நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை
நாடு முழுவதும் கோடை காலம் துவங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இனிவரும் காலங்களில் மின்சார தேவை அதிகம் தேவைப்படும். இதனை கருத்தில் கொண்டு மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்,கே,சிங் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், மின்சாரத்துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மின்சார தேவையினை சமாளிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, நிலக்கரி அடிப்படையிலான அனல்மின் உற்பத்தி நிலையங்களில், முன்னதாகவே தேவையான அனைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுமாறு மின்பயன்பாட்டு அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இறக்குமதி நிலக்கரியை அடிப்படையாக கொண்டுள்ள மின் நிலையங்கள் மார்ச் 16ம்தேதி முதல் முழு உற்பத்தி திறனுடன் இயங்க 11ம்பிரிவின் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்சகட்ட தேவையின் போது எரிவாயு மின்சாரம் பயன்படுத்தப்படும்
இதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் ரயில்வே வாரிய உறுப்பினர் நிலக்கரியை தடையில்லாமல் பல பகுதிகளுக்கு கொண்டு செல்ல போதுமான ரயில் பெட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொண்டனர். உச்சகட்ட தேவையின் போது, எரிவாயு மின்சாரம் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, ஏப்ரல், மே மாதங்களில் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் 9,000 மெகாவாட் எரிவாயு திறன் கொண்ட மின் நிலையங்களை இயக்க என்டிபிசி நிறுவனத்துக்கு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அடுத்த மாத உற்பத்திக்கு போதுமான தண்ணீரை தேக்கி வைக்குமாறு புனல் மின் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய நிலக்கரி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டால் கூடுதலாக 2,920 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்பதால் மார்ச் மாதத்திற்குள் அவை நிறுவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.