முதல்வருக்கே 2 மாதம் சம்பளம் கட்; கடும் நிதி நெருக்கடியில் திணறும் இமாச்சலப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசத்தில் நிலவும் பொருளாதாரச் சூழ்நிலையில், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, 2 மாதங்களுக்கு முதல்வர் உள்ளிட்ட இமாச்சலப் பிரதேச எம்எல்ஏக்களுக்கு சம்பளம், சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) தெரிவித்தார். அமைச்சரவையில் விவாதித்து, வரும் காலங்களில் மாநிலம் நல்ல முன்னேற்றம் காணும் வரை, 2 மாதங்களுக்கு சம்பளமோ, படிகளோ எடுக்க மாட்டோம் என்று மாநில அமைச்சரவையில் ஒருமனதாக முடிவு செய்ததாக சுக்விந்தர் சிங் சுகு கூறினார். அவர் தனது எக்ஸ் பதிவில், "நாங்கள் மாநிலத்தின் பொருளாதார நலன்களுக்காக ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளோம். மாநிலத்தின் பிரகாசமான எதிர்காலத்தை எப்போதும் நமது தனிப்பட்ட ஆதாயங்களுக்கு முன் வைக்க வேண்டும்." என்று மேலும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிதி தரவில்லை எனக் குற்றச்சாட்டு
சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் கூட்டத்தொடரின் போது மாநிலத்தின் நிதி நிலை குறித்த அறிக்கையையும் சுக்விந்தர் சிங் சுகு வெளியிட்டார். மத்திய அரசின் நிதி மாநிலத்திற்கு வரவில்லை என்று கூறினார். "மாநிலத்தின் நிதி நிலை சரியில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. 8,058 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறை மானியம், 6,258 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு, 2025-26ல் மேலும் குறைக்கப்படும்." என்று முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிடிஎன்ஏவின் சுமார் ரூ.9,042 கோடியில் எந்தத் தொகையையும் மத்திய அரசு மாநிலத்துக்கு அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், 2022க்குப் பிறகு மாநிலத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டதையும் நிதித் தட்டுப்பாட்டிற்கான காரணமாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.