ஆப்பிரிக்க சிறுத்தைகள் விவகாரம்: மத்திய அரசுக்கு சாதகமாக பதிலளித்தது உச்ச நீதிமன்றம்
ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவில் உயிரிழந்ததால் எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை கேள்வி கேட்க எந்த காரணமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று(ஆகஸ்ட் 7) தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவின் குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட 20 சிறுத்தைகளில் 9 சிறுத்தைகள் உயிரிழந்ததை அடுத்து, இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசாங்கத்தை கேள்வி கேட்க எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். எனினும், சிறுத்தைகள் எதனால் உயிரிழந்தன என்ற "பொது அக்கறை" கேள்விக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
இந்தியாவில் பிறநத 4 குட்டிகளில் 3 குட்டிகள் உயிரிழந்துவிட்டன
1952இல் ஆசிய சிறுத்தைகள் இந்தியாவில் மொத்தமாக அழிந்துவிட்டன. அது போன்ற சிறுத்தைகளை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்த 'பிராஜெக்ட்-சீட்டா' என்ற திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து, நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து 20 சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த சிறுத்தைகளால் இதுவரை நான்கு குட்டிகள் இந்தியாவில் பிறந்துள்ளன. அப்படி பிறந்த முதல் மூன்று குட்டிகள் உட்பட 9 சிறுத்தைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தன. இதற்கிடையில், இந்த திட்டத்தை வழிநடத்தும் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் ஆப்பிரிக்க நிபுணர்கள், சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் திட்ட மேலாண்மை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பி இருந்தனர். இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் இது குறித்து பேசியுள்ளது.