அதிமுக-பாஜக இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை : பரபரப்பு பேட்டியளித்த அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று(செப்.,21) செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் பேசுகையில், "எனது அரசியலில் நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கு தன்மானம் என்பது மிக அவசியம்" என்றும், "அதிமுக-பாஜக இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும் எனக்கும் பிரச்சனை உள்ளதா? என்றால் இருக்கலாம். ஆனால் நான் யாரையும் தவறாக பேசவில்லை" என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, கூட்டணி குறித்த கேள்விகளுக்கு தன்னால் பதிலளிக்க முடியாது என்று கூறிய அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிப்போருக்கு தானும் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். அதில் மாற்று கருத்தே இல்லை என்றும் அவர் கூறியது குறிப்பிடவேண்டியவை.
அண்ணா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கோர முடியாது - அண்ணாமலை
அதனை தொடர்ந்து அவர், "மத்தியில் பிரதமர் மோடி, மாநிலத்தில் முதல்வராக எடப்பாடி கே பழனிசாமியை பாஜக அறிவிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜு கூறுகிறார். அது எப்படி சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை. பாஜக தலைமைதான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்" என்று கூறினார். மேலும் அவர், அண்ணா குறித்து தான் என்றும் விமர்சனம் செய்ததும் இல்லை, எதிர்த்ததும் இல்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர், "குடும்ப அரசியலை விமர்சித்தவர் அண்ணா. தமிழகத்தை பொருத்தவரையில் காங்கிரஸ் குரலும் திமுக'வின் குரலும் ஒன்றுதான்" என்று பேசியுள்ளார். அதேபோல் அவர், அண்ணா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கோர முடியாது என்றும், வரலாற்றில் உள்ளதை எடுத்து சொல்ல வேண்டியது தனது கடமை என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.