NEET-UG மறுதேர்வு கிடையாது; முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
நீட்-யுஜி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததுள்ளது. தேர்வுதாள் கசிவு நடந்தது என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. புதிதாக நீட்-யுஜிக்கு மறுதேர்வு வைப்பது, தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் நடந்ததாக கூறி இந்த ஆண்டு மே 5 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட்-யுஜி தேர்வுக்கு மறுதேர்வு வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரித்தது.
வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை
இதற்கான தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி சந்திரசூட், தேசிய தேர்வு முகமை அளித்த தரவுகளையும், ஐஐடி மெட்ராஸின் அறிக்கையையும் நீதிமன்றம் ஆய்வு செய்ததாக கூறினார். மேலும், வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். "இந்த கட்டத்தில், தேர்வில் முறைகேடுகள் நடந்தது என்பதையும், தேர்வின் புனிதத்தன்மைக்கு பங்கம் நடந்துள்ளது உள்ளது என்பதையும் நிரூபிப்பதற்கு ஆவணங்கள் எதுவும் இல்லை," என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். மறுதேர்வு நடத்துவது, பரீட்சையை எழுதிய பல மாணவர்களின் வாழ்வில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற உண்மையை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.