இனி ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளுக்கு பதில் வைலட் நிற பால் பாக்கெட் - ஆவின் நிர்வாகம்
தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் முழுவதுமாக நிறுத்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஏராளமான மக்கள் ஆவின் பால்களையே அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அதன்படி ஆரஞ்சு, பச்சை, நீலம் உள்ளிட்ட வெவ்வேறு வண்ணங்களில் ஆவின் பால் வெவ்வேறு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் ஆரஞ்சு நிற ஆவின் பால் இனி விற்பனைக்கு வராது, அது முழுவதுமாக நிறுத்தப்படுகிறது என்று ஆவின் நிர்வாகம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு மாற்றாக வைலட் நிறம் கொண்ட புதிய பாக்கிங்கில் 'ஆவின் டிலைட்' என்னும் பெயரில் ஆவின் பால் விற்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கொழுப்பு சத்திற்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்படும் ஆவின் பால் பாக்கெட்கள்
இதனை தொடர்ந்து இதன் விலை ரூ.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அறிக்கை வெளியாகியுள்ளது. இதனையடுத்து இன்று(நவ.,16) 200 மி.லி. ஆவின் டிலைட் பால் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே இனி பால் முகவர்கள் மேற்கூறப்பட்டுள்ள விலைக்கு ஏற்றாற்போல் வங்கியில் பணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும், மண்டல பொறுப்பாளர்கள் இந்த விலை மாற்றத்தின் அடிப்படையில் பணத்தினை வசூல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவின் பால் பாக்கெட்டானது கொழுப்பு சத்திற்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.