Page Loader
ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும் வழக்குகளில் எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கு விலக்கு கிடையாது: உச்ச நீதிமன்றம் 

ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும் வழக்குகளில் எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கு விலக்கு கிடையாது: உச்ச நீதிமன்றம் 

எழுதியவர் Sindhuja SM
Mar 04, 2024
12:12 pm

செய்தி முன்னோட்டம்

சபையில் ஓட்டளிக்க லஞ்சம் வாங்குவது , சட்டமன்றத்தில் பேசுவதற்கு பணம் வாங்குவது போன்ற வழக்குகளில் இருந்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் விடுபட முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், இந்த விஷயத்தில் இன்று ஒருமனதாக முடிவை அறிவித்தது. அக்டோபர் 2023இல் இதற்கான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவையில் பேசுவதற்கு அல்லது வாக்களிப்பதற்கு லஞ்சம் வாங்கும் சட்டமியற்றுபவர்களுக்கு 1998 ஆம் ஆண்டில் விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், அப்போதைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா 

"லஞ்சம் வாங்குவதே ஒரு குற்றமாகும்": உச்ச நீதிமன்றம் 

லஞ்சம் என்பது நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு உட்பட்டது அல்ல என்றும், முந்தைய தீர்ப்பு அரசியலமைப்பின் 105 மற்றும் 194 வது பிரிவுகளுக்கு முரணானது என்றும் உச்ச நீதிமன்றம் தற்போது கூறியுள்ளது. 1993இல் பி.வி. நரசிம்மராவ் அரசாங்கத்தை அவையில் ஆதரிப்பதற்காக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்கள் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த லஞ்ச வழக்கிற்கு 1998 இல் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், லஞ்சம் என்பது நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு உட்பட்டது என்று கூறியது. இந்நிலையில், அந்த தீர்ப்பை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், "சட்டமன்ற உறுப்பினரின் ஊழல்/லஞ்சம் பொது வாழ்வில் நன்னடத்தையைக் குறைக்கிறது. லஞ்சம் வாங்குவதே ஒரு குற்றமாகும்." என்று தெரிவித்துள்ளது.