திருவள்ளுவர் பிறந்ததின சர்ச்சை: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம், "திருவள்ளுவர் பிறந்த தினம் இதுதான் என உத்தரவிட முடியாது" எனத் தெரிவித்துள்ளது. தை 2 ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுவதாக எதிர்த்து, திருவள்ளுவர் திருநாள் கழகத்தின் தலைவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 1935-ம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில், மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்கள், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டனர். மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில், அந்த நாளில் தான் விழா கொண்டாடப்படுகிறது என்றும் மனுதாரர் குறிப்பிட்டார். ஆனால், அரசு தரப்பில், தை 2-ஆம் தேதியை திருவள்ளுவர் பிறந்த நாளாக அறிவிக்கவில்லை எனக் கூறி, திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படும் விதம் பற்றிய வாதம் முன்வைக்கப்பட்டது.
வழக்கினை தள்ளுபடி செய்த நீதிபதி
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருவள்ளுவர் பிறந்தநாள் எது என்று அறுதியிட்டு கூற எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தை, அவரது பிறந்தநாளாக அறிவிக்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் திருவள்ளுவரின் பிறந்தநாளை கண்டுபிடிக்க நீதிமன்றமே ஆராய்ச்சியில் இறங்கியதாகவும், அது குறித்து தீர்க்கமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். அவற்றுடன், மனுதாரர் சார்ந்த அமைப்பு, வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தை திருவள்ளுவர் பிறந்த தினமாக கொண்டாட எந்த தடையும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தினார்.