பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதனை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தங்கள் நிறுவனத்திற்கும், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் என்.எல்.சி.தரப்பில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 2 தினங்களுக்கு முன்னர் புல்டவுஸர் கொண்டு மணல்களை அள்ளி கால்வாய் அமைக்கும் வீடியோக்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. இந்த வீடியோக்களை பார்த்த நீதிபதி, அது தொடர்பாக என்.எல்.சி. நிர்வாகத்திடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் 3ம் தேதிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
அதன்படி நீதிபதி என்.எல்.சி. நிர்வாகத்திடம், "பயிர்கள் அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து, அந்த வீடியோவை பார்க்கையில் தனக்கு கண்ணீர் வந்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இதற்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னரே கால்வாய் அமைக்க நிலங்கள் கையகப்படுத்தி விட்டதாகவும், அந்த நிலத்தினை தற்போது பயன்பாட்டிற்கு எடுக்கையில் விவசாயிகள் பிரச்சனைகளை ஏற்படுத்தி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையினை வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.