லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்
மார்ச் 19அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக கடந்த மாதம் சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை NIAவிடம் ஒப்படைக்குமாறு டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. முதற்கட்ட விசாரணையின் போது, இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானின் ISI தீவிரவாத குழுவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையான விசாரணையை மத்திய அரசு விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்
மார்ச் 19அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நடந்த வன்முறைப் போராட்டத்தின் போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தூதரகத்தின் பால்கனியில் ஏறி இந்திய கொடியை கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர். மேலும், அவர்கள் இந்திய தூதரகத்தையும் சேதப்படுத்தினர். காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்தது. லண்டனில் மட்டுமல்லாமல், கனடா, சான் பிரான்சிஸ்கோ போன்ற இடங்களில் அமைந்த்துள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் இந்து கோவில்களும் சரமாரியாக தாக்கப்பட்டது. காலிஸ்தான் என்பது சீக்கியர்களுக்காக கோரப்படும் தனி நாடாகும். இதன் தீவிர ஆதரவாளரும் தலைவருமான அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸார் தேடி வருகின்றனர்.