
லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு
செய்தி முன்னோட்டம்
மார்ச் 19, 2023 அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக டெல்லி காவல்துறை இன்று(மார் 24) வழக்கு பதிவு செய்தது.
இந்திய தண்டனைச் சட்டம் (IPC), சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) மற்றும் பொது சொத்து சட்டம் (PDPP) ஆகியவற்றின் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.
வெளிநாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், இந்த சம்பவம் குறித்து சிறப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கி இருக்கிறது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா
இந்திய கொடியை கைப்பற்றிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
காலிஸ்தான் ஆதரவாளர்கள் மார்ச் 19ஆம் தேதி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்த இந்திய கொடியை கைப்பற்றியது மட்டுமல்லாமல், தூதரகத்தையும் சேதப்படுத்தினர்.
காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது, அம்ரித்பாலை விடுவிக்க கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகும் நிலையில், டெல்லி காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகம் புகார் அளித்ததை அடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.