ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் சோதனை செய்யும் என்ஐஏ
கடந்த வார இறுதியில் பெங்களுருவில் உள்ள பிரபல ஹோட்டலான ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த விவகாரத்தில், வழக்கின் விசாரணை மத்திய புலனாய்வு துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக CCTV காட்சிகள் ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதில் குற்றவாளி அடையாளம் காணப்பட்ட நிலையில், அவனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்த சூழலில், இன்று காலை முதல், சென்னை மண்ணடி உள்பட பல்வேறு இடங்களில், தேசிய புலனாய்வு துறையினர் சோதனை செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சென்னை முத்தையால் பேட்டை, பிடாரியார் கோவில் தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, ராமாநாதபுரத்திலும் என்ஐஏ போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றவாளி அண்டை மாநிலங்களில் பதுங்கி இருக்க கூடும் என சந்தேகம்
இந்த குண்டு வெறுப்பிற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், 2022-ஆம் ஆண்டு மங்களூரில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பிற்க்கும், இதற்கும் சம்மந்தம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. மறுபுறம், இந்த குண்டுவெடிப்பிற்கு சம்மந்தப்பட்ட நபர், தமிழ்நாடு, கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு தப்பி இருக்கக்கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், CCTV காட்சிகளை பரிசோதித்ததில், வெடிகுண்டு வைத்த சந்தேக நபர், ஓட்டலை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஒன்பது நிமிடங்கள் உள்ளே இருந்தார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த மர்ம நபர், சன்கிளாஸ், முகமூடி மற்றும் பேஸ்பால் தொப்பி சகிதமாக, பேருந்து நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் கஃபே நோக்கி நடந்து செல்வது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.