ஃப்ளைதுபாய் விமானக் கடத்தல் முயற்சி: என்ஐஏ பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
செய்தி முன்னோட்டம்
துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் FZ1073 பயணிகள் விமானத்தின் காக்பிட்டில், இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் மீது நடத்தப்பட்ட கோடாரித் தாக்குதல் மற்றும் விமானக் கடத்தல் முயற்சி தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் விமானக் கடத்தல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
தாக்குதல் பின்னணி
காக்பிட்டில் நடைபெற்ற கோடாரித் தாக்குதல் பின்னணி
கடந்த செப்டம்பர் 30 அன்று நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில், ஓமன் நாட்டை சேர்ந்த இணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி திடீரெனக் கோடாரியால் கேப்டன் ஸ்மித் மச்சாரைத் தாக்கினார்.
தலை மற்றும் கைகளில் பலத்த வெட்டுக்காயங்கள் அடைந்தபோதிலும், கேப்டன் ஸ்மித் மனஉறுதியுடன் காக்பிட் கதவின் பூட்டைத் திறந்தார்.
இதன் மூலம் விமானத்தில் இருந்த மற்ற ஊழியர்கள் மற்றும் பயணிகள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திய இணை விமானியை உடனடியாக மடக்கிப் பிடித்தனர்.
சவுதி அரேபியா
சவுதிக்குத் திருப்பி விடப்பட்ட விமானம் மற்றும் சிகிச்சை
விமானத்தைக் கடத்த அல்லது விபத்துக்குள்ளாக்க திட்டமிட்ட இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் உடனடியாக சவுதி அரேபியாவின் தபூக் நகருக்கு அவசரமாகத் திருப்பி விடப்பட்டது.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், கேப்டன் ஸ்மித் அபுதாபிக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற இந்த சம்பவத்தை என்ஐஏ விசாரிக்கிறது.
பாராட்டு
பிரதமர் மோடி மற்றும் சர்வதேச தலைவர்கள் பாராட்டு
மும்பையை சேர்ந்த 39 வயதான கேப்டன் ஸ்மித் மச்சாரின் இந்த சாமர்த்தியமான வீர செயலைப் பாராட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருடன் தொலைபேசியில் பேசினார்.
மேலும் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகளும் அவரது உயிரைக் காப்பாற்றிய துணிச்சலை பாராட்டியுள்ளன.
இஸ்ரேல் அரசு அவருக்குச் சிவில் வீரத்திற்கான விருதை அறிவித்துள்ளது.
இந்த பயங்கரவாத சதி பின்னணி குறித்துச் சவுதி, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் இணைந்து என்ஐஏ விசாரணை நடத்தவுள்ளது.