
தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பின் பீகார் தலைவரை கைது செய்தது என்ஐஏ
செய்தி முன்னோட்டம்
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் பீகார் மாநிலத் தலைவர் மஹ்பூப் ஆலம் என்பவரைக் கைது செய்துள்ளது. 2022 ஆம் ஆண்டு புல்வாரிஷெரீஃப் பயங்கரவாதச் சதி வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஆலம், கிஷன்சஞ்சில் வைத்துச் சனிக்கிழமை (செப்டம்பர் 14) பிடிபட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 19 வது நபர் ஆலம் ஆவார். வெவ்வேறு மதங்கள் மற்றும் குழுக்களிடையே வெறுப்புணர்வை வளர்ப்பதன் மூலம் பயங்கரவாதச் சூழலை உருவாக்குவதற்காக, சட்டவிரோத மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளில் பிஎஃப்ஐ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர் என்று என்ஐஏ குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்லாமிய ஆட்சி
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி
இந்தியா 2047: இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி என்ற தலைப்பில் பிஎஃப்ஐ அமைப்பால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ இந்த அமைப்பினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த ஆவணம் புல்வாரிஷெரீஃப் பகுதியில் உள்ள அஹ்மத் அரண்மனையில் இருந்து கைப்பற்றப்பட்டது. என்ஐஏவின் விசாரணையில், மஹ்பூப் ஆலம், பிஎஃப்ஐயின் முக்கிய சதிகாரர்களில் ஒருவராக இருப்பது தெரிய வந்துள்ளது. அவர், பிஎஃப்ஐ அமைப்பிற்காகப் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது மற்றும் கூட்டங்களை நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தேச விரோத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டி, அதனை மற்ற குற்றவாளிகளுக்கும், பிஎஃப்ஐ உறுப்பினர்களுக்கும் வழங்கியதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.