நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
மருத்துவ மாணவர்களுக்கு நடத்தப்படும் நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் இன்று(ஜூலை 13) அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்புகளில் சேர முடியும். அதே போல், மருத்துவ மேற்படிப்புகளில்(PG) சேர்வதற்கு 'PG நீட்' என்ற தேர்வை மருத்துவ மாணவர்கள் எழுதி வந்தனர். மேலும், வெளிநாடுகளில் சென்று மருத்துவம் படிப்பதற்கும் தனியாக தேர்வு எழுத வேண்டி இருந்தது. இந்நிலையில், வெளிநாடுகளில் சென்று மருத்துவம் படிக்க விரும்புபவர்களும், மருத்துவ மேற்படிப்பை படிக்க விரும்புபவர்களும் 'நெக்ஸ்ட்' என்ற ஒரே தேர்வை எழுதி தகுதி பெற்று கொள்ளலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் முக.ஸ்டாலின்
ஆனால், இதற்கு மருத்துவ மாணவர்களும் அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், "மருத்துவம் படிக்க விரும்புவர்களுக்கு நீட் தேர்வே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 'நெக்ஸ்ட்' தேர்வை அறிமுகப்படுத்தினால் கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்கள் பெரிதளவு பாதிக்கப்படுவார்கள். அதனால், இந்த புதிய தேர்வு முறையை கைவிட வேண்டும்" என்று முதல்வர் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில், 2019-பேட்ச் மாணவர்களுக்கு வரும் 28ஆம் தேதி நடத்தப்பட இருந்த நெக்ஸ்ட் தேர்வு சுகாதாரத்துறையிடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.