மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நேரடி சூரிய வெளிச்சத்தில் வைக்கப்பட்ட பிறந்த குழந்தை பலி
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை 30 நிமிடங்களுக்கு நேரடி சூரிய ஒளியில் வைக்கப்பட்டதால் உயிரிழந்தது.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அந்த குழந்தை நேரடி சூரிய ஒளியில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த நகரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெயின்புரியின் தலைமை மருத்துவ அதிகாரி (சிஎம்ஓ) டாக்டர் ஆர்சி குப்தாவின் கூற்றுப்படி, இந்த சம்பவம் அந்த நகரின் ராதா ராமன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் மருத்துவமனையில் நிகழ்ந்தது.
மெயின்புரியின் புகாய் கிராமத்தில் வசிக்கும் ரீட்டா தேவி, ஸ்ரீ சாய் மருத்துவமனையில் 5 நாட்களுக்கு முன்பு சி-செக்ஷன் மூலம் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
உத்தரப்பிரதேசம்
மஞ்சள் காமாலையைத் தடுக்க சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குழந்தை
புதன்கிழமை, மே 15 அன்று, பிறந்த அந்த குழந்தை சில உடல்நலப் பிரச்சினைகளை வெளிப்படுத்தியது.
இதனையடுத்து, அந்த மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவர் அந்த குழந்தையை நேரடியாக சூரிய ஒளியில் அரை மணி நேரம் வைத்திருக்குமாறு குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினார்.
மருத்துவரின் அறிவுரையை பின்பற்றி, குழந்தையின் குடும்பத்தினர் காலை 11.10 மணியளவில் மருத்துவமனையின் கூரையில் அந்த குழந்தையை வைத்தனர்.
30 நிமிடங்களுக்குப் பிறகு அந்த குழந்தையை குடும்பத்தினர் கீழே கொண்டு சென்றனர். எனினும் சிறிது நேரத்தில் அந்த குழந்தை உயிரிழந்தது.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, பிறந்த குழந்தைகளில் மஞ்சள் காமாலையைத் தடுக்க சூரிய ஒளியில் குழந்தையை வைத்திருப்பது மிக சாதாரணமான நடைமுறையாகும். ஆனால், இது எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டும்.