சென்னை மெட்ரோ குறித்த புதிய அப்டேட் கொடுத்த அதிகாரிகள்
சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவை மக்களை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணம் மேற்கொள்ள பேருதவியாக உள்ளது. இதனால் இதில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது சென்னையில் 2ம்கட்ட மெட்ரோப்பணிகள் ரூ.63,246 கோடி செலவில் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளையும் இணைக்க மெட்ரோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 2ம்-கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை பகுதியிலிருந்து சிறுசேரி வரையான 3ம் வழித்தடத்தினை கிளம்பாக்கம் வரை நீட்டிக்கலாம் என்றும், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வரையிலான 4ம் வழித்தடம் பரந்தூர் வரையும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான 5ம் வழித்தடத்தினை கோயம்பேட்டிலிருந்து ஆவடி வரை நீட்டிக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அரசு ஒப்புதல் அளித்த பின்னரே விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்
இந்நிலையில், தற்போது இதற்கான சாத்தியக்கூறு குறித்த அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. அதன்படி, கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை மற்றும் சிறுசேரியில் இருந்து கிளம்பாக்கம் வரையிலான 2 வழித்தடங்கள் நீட்டிப்பு குறித்த சாத்தியக்கூறு அறிக்கை அடுத்த 2 வாரங்களில் முடிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த மெட்ரோ விரிவாக்க திட்டத்தில், கோயம்பேடு-ஆவடி வழித்தடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், சாத்தியக்கூற்றுக்கான அறிக்கையில் செலவினங்கள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட முழு விவரங்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே சாத்தியக்கூறு அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், விரிவான திட்ட அறிக்கையானது தயார் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.