வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி
நவீன மற்றும் வளர்ந்த இந்தியாவின் தேவைகளை மனதில் கொண்டு புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 12) தெரிவித்தார். குழந்தைகளின் வளர்ச்சி, அறிவு, திறன்கள், மற்றும் இந்திய கலாச்சாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்த கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது என்றும் அவர் கூறினார். "நவீன மற்றும் வளர்ந்த இந்தியாவின் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய தேசிய கல்விக் கொள்கையை(NEP) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது" என்று மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஆசிரியர்கள் நியமன நிகழ்ச்சியில் உரையாற்றும் போது பிரதமர் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான பிரச்சாரம் வேகமாக நடந்து வருவதாகவும், பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
மத்தியப் பிரதேசத்தின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது: மோடி
மேலும், ஆசிரியர் பணி போன்ற முக்கிய பணிகளில் புதிதாக சேரவுள்ள இளைஞர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். NEP-ஐ திறம்பட செயல்படுத்துவதில் ஆசிரியர்களின் முக்கிய பங்கை எடுத்துரைத்த பிரதமர், மத்தியப் பிரதேசத்தில் நடத்தப்படும் மாபெரும் ஆசிரியர் வேலைவாய்ப்பு முகாம்கள் இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் வாய்ப்பு என்றும் கூறினார். இன்று நியமிக்கப்படும் ஆசிரியர்களில் பாதி பேர் பழங்குடியினப் பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், இதனால் பல குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் மோடி தெரிவித்தார். மேலும், மத்தியப் பிரதேச அரசு இந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்களில் பணி நியமனம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இதனால், மாநிலத்தின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.