ஜூன் 1 முதல் இந்தியாவில் அமலுக்கு வருகிறது புதிய ஓட்டுநர் உரிம விதிகள்
இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவது என்பது பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், ஜூன் 1 முதல் புதிய ஓட்டுநர் லைசன்ஸ் விதிகள் இந்தியாவில் அமலுக்கு வருகிறது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஜூன் 1 முதல் புதிய விதிகள் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. ஆவணமாக்கல் மற்றும் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறும் செயல்முறைகள் எளிமையாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்(ஆர்டிஓ) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பு செய்யப்படும் ஓட்டுநர் சோதனைகள் விருப்ப தேர்வாக மாற்றப்பட உள்ளது என்பது இந்த புதிய விதிகளின் ஒரு சிறப்பம்சமாகும்.
இந்த விதிகள் மூலம் செய்யப்பட இருக்கும் பெரும் மாற்றங்கள்
அதிவேகமாக அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட உள்ளது. செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால், இனி ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும். கூடுதலாக, ஒரு மைனர்(18 வயதுக்குட்பட்டவர்கள்) வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவர்களது பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். மைனரால் ஒட்டப்பட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்படுவதோடு, வாகனம் ஓட்டிய மைனர் 25 வயது வரை உரிமம் பெறத் தகுதியற்றவராக அறிவிக்கப்படுவார். சமீபத்தில் புனேவை சேர்ந்த ஒரு 17 வயது சிறுவன் தனது ஆடம்பரமான போர்ஷால் இரண்டு பேரை இடித்து கொன்று அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.