உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிந்து விபத்து: 3வது நாளாக தொடரும் 40 தொழிலாளர்களை மீட்கும் பணி
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்க 48 மணி நேரத்திற்கும் மேலாக ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 200 மீட்டர் பரப்பளவின் மீது சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை அடுத்து, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கினர். அந்த தொழிலாளர்களை மீட்பதற்கு 48 மணிரத்திற்கும் மேலாக மீட்பு குழுக்கள் இடிந்து விழுந்த பாறைகளை அதிநவீன இயந்திரங்கள் கொண்டு வெட்டி வருகின்றன. சிக்கிய தொழிலாளர்களை அடைய மீட்புப் பணியாளர்கள் தப்பிக்கும் பாதையை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். தொழிலாளர்களை மீட்க மொத்தம் சுமார் 40 மீட்டருக்கு துளையிட வேண்டும். ஆனால், இதுவரை 21 மீட்டருக்கு மட்டுமே துளையிடபட்டிருக்கிறது.
மண் சரிந்து விழுந்ததால் மீட் பணியில் தாமதம்
இன்று அல்லது நாளைக்குள் மீதமுள்ள 19 மீட்டருக்கும் துளை போடப்பட்டு தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 30 மீட்டருக்கு துளையிடப்பட்டதாகவும், ஆனால் அந்த பணி தொடர்ந்து கொண்டிருக்கும் போதே போடப்பட்டிருந்த துளைக்குள் மண் சரிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், மீட்பு பணியாளர்களால் இதுவரை 21 மீட்டருக்கு மட்டுமே துளையிட முடிந்தது. இந்த துளையிடும் பணி முடிந்த பிறகு, 900 மிமீ விட்டம் கொண்ட ஒரு குழாயை மீட்புக் குழுக்கள் உள்ளே அனுப்ப உள்ளது. அந்த குழாய் வழியாக தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். இந்த துணிச்சலான மீட்பு பணிக்கு தேவையான அனைத்து பொருட்களும் இயந்திரங்களும் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.