Loading...
நேபாள ஹெலிகாப்டர்  விபத்த்தில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி பலி
நேபாளத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழப்பு.

நேபாள ஹெலிகாப்டர்  விபத்த்தில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி பலி

எழுதியவர் Vasuki
Nov 03, 2026
05:48 pm

செய்தி முன்னோட்டம்

நேபாளத்தின் உலகப் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகர பகுதியில் அமைந்துள்ள சோலுகும்பு மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு தனியார் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முயன்ற போது ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த கோர விபத்தில் நியூசிலாந்து வாழ் இந்தியர் மற்றும் விமானி உள்பட மூவர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து

தரையிறங்க முயன்றபோது நேருக்கு நேர் மோதல்

சோலுகும்பு மாவட்டத்தில் எவரெஸ்ட் மலையேற்றப் பாதையில் அமைந்துள்ள பெரிச்சே (Pheriche) என்ற இடத்தில் உள்ள ஹெலிபேடில் இன்று காலை சுமார் 8 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

ஃபிஷ்டெயில் ஏர் மற்றும் ஏர் டைனாஸ்டி ஆகிய இரண்டு தனியார் விமான நிறுவனங்களைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக ஒன்றின் மீது ஒன்று பலமாக மோதி நொறுங்கின.

இதில் ஃபிஷ்டெயில் ஏர் நிறுவன ஹெலிகாப்டரில் பயணித்த சென்னையை சேர்ந்த சுற்றுலாப் பயணியான வசந்தகுமார் (47) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மீட்புக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வான்வழி மீட்பு

விமானி உட்பட மூவர் படுகாயம் 

இவ்விபத்தில், டைனாஸ்டி ஏர் ஹெலிகாப்டரில் பயணித்த நியூசிலாந்து வாழ் இந்தியரான ஷைலேஷ் குமார் படேல் (49), விமானி ரவீந்திர பிரஜாபதி மற்றும் மற்றொரு நபர் என மூவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

விபத்து நடந்த உடனேயே சிம்ரிக் ஏர் நிறுவனத்தின் மீட்பு ஹெலிகாப்டர் மூலம் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்டனர்.

படுகாயமடைந்த மூவரும் உடனடி வான்வழிப் போக்குவரத்து மூலம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் பலியான வசந்தகுமாரின் உடல் பிரேதப் பரிசோதனை மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்காக லுக்லாவில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ADVERTISEMENT