நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' : ஆளுநர் தமிழிசை, எல்.முருகன் பொதுமக்களோடு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் உள்ள மொத்த அதிவேக ரயில்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய 11 மாநிலங்களில் இன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில், நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கவிழா நடந்தது.
பராமரிப்பு காரணமாக இந்த ரயில் சேவை செவ்வாய்கிழமையன்று இயக்கப்படாது
அதன்படி இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன், திமுக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஞான திரவியம், தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகின. முதல் நாள் சேவை என்பதால் ரயில்வே ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், உள்ளிட்ட பல தரப்பினருக்கு இதில் பயணிக்க பாஸ் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இன்று யாரிடமும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. மேலும், பராமரிப்பு காரணமாக இந்த ரயில் சேவை செவ்வாய்கிழமையன்று மட்டும் செயல்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ரயிலில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எல்.முருகன் பொதுமக்களோடு பயணித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.