இன்று நடைபெறவிருந்த நீட்-யுஜி கலந்தாய்வு திடீரென்று ஒத்திவைப்பு
நீட் யுஜி தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பிரச்சனைகளுக்கு மத்தியில், இன்று நடைபெற இருந்த நீட்-யுஜி கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று நடைபெறவிருந்த மருத்துவ இளங்கலை பட்டப்படிப்புக்கான(NEET-UG) கலந்தாய்வை தேசிய தேர்வு முகமை ஒத்திவைத்துள்ளது. இதற்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். மறு அறிவிப்பு வரும் வரை இது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கான(AIQ) நீட்-யுஜி சீட் கவுன்சிலிங் இன்று தொடங்க இருந்தது. நீட்-யுஜி பிரச்சனை தொடர்பான மனுக்களை வரும் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.
ஜூலை 8 ஆம் தேதி நீட் பிரச்சனையை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோருடன் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்றம் ஜூலை 8 ஆம் தேதி பல்வேறு நீட் யுஜி 2024 மனுக்களை விசாரிக்கும். வினாத்தாள் கசிவு குறித்தஅந்த மனுக்களில், மனுதாரர்கள், முழுத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் மருத்துவ நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். சிலர் தேசிய தேர்வு முகமையின்(என்டிஏ) செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளனர். இன்று நடைபெற இருந்த நீட் யுஜி கவுன்சிலிங்கில், 15 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு கல்லூரிகள், மத்திய மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவைகளில் உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற இருந்தது.