இம்மாதம் நடைபெறுகிறது நீட் முதுகலை தேர்வு: தேர்வுக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக வினாத்தாள்கள் தயாரிக்கப்படும்
நீட்-பிஜி தேர்வு, இம்மாதம் நடைபெறும் என்று சைபர் கிரைம் எதிர்ப்பு அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை சைபர் கிரைம் வட்டாரங்களிடம் இருந்து பெற்றதாக NDTV கூறியுள்ளது. மேலும், நீட் முதுகலை தேர்வின் வினாத்தாள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக தயாரிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. நீட்-யுஜி தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்த நீட்-பிஜி தேர்வு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ஒத்திவைக்கப்பட்டது. "தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் மருத்துவ மாணவர்களுக்கான நீட்-பிஜி தேர்வுகளின் தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்ய உள்ளதாக" அரசாங்கம் அப்போது கூறியது.
புகார்களை விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைத்தது கல்வி அமைச்சகம்
மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான மருத்துவ வல்லுநர்கள் பதிவு செய்திருந்த தேர்வு அப்போது ரத்து செய்யப்பட்டது. இதனால், குறிப்பாக பல கிலோமீட்டர்கள் பயணம் செய்து தேர்வெழுத வந்தவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. புகார்களை விசாரிக்க உயர்மட்டக் குழுவை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமித்துள்ளார். நீட்-யுஜி மற்றும் யுஜிசி-நெட் தேர்வுகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து நீட்-பிஜி தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நெட் தேர்வு ஜூலை 25 முதல் ஜூலை 27 வரை நடைபெறும்.