NEET PG சேர்க்கையில் புதிய சீர்திருத்தம்: பெர்சன்டைல் முறைக்கு பதிலாக ரேங்க் முறைக்கு மாற தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பிஜி சேர்க்கை முறையில் தற்போதிருக்கும் பெர்சன்டைல் முறையை நீக்கிவிட்டு, ரேங்க் அடிப்படையிலான புதிய தகுதி முறையை அறிமுகப்படுத்துவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நீட் பிஜி சேர்க்கை முறையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட 12 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், இப்புதிய மாற்றம் நீட் பிஜி மற்றும் நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பரிந்துரைகள்
காலியாகும் இடங்களை நிரப்ப குழுவின் பரிந்துரைகள்
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இடங்கள் காலியாக எஞ்சியிருப்பதை தவிர்க்க, நிபுணர் குழு பல்வேறு சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளது.
கிளினிக்கல் அல்லாத படிப்புகளுக்கான சேர்க்கைக் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க வேண்டும்.
ப்ரீ-கிளினிக்கல் மற்றும் பாரா-கிளினிக்கல் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்குச் சேவைப் பிணைப்பு விதிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இடங்கள் வீணாகாமல் தடுக்க கூடுதல் கலந்தாய்வுச் சுற்றுகளை நடத்தலாம். எனினும், இது கலந்தாய்வு காலத்தை நீட்டிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
'Freeze' மற்றும் 'Float'
கலந்தாய்வு தாமதத்தை தவிர்க்க 'Freeze' மற்றும் 'Float' முறைகள்
கலந்தாய்வில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்த்து, கல்வி ஆண்டை விரைவாக தொடங்க மருத்துவக் கலந்தாய்வுக் குழு (MCC) 2026-27 கலந்தாய்வு முறையில் புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை இறுதியாக உறுதிசெய்ய 'Freeze' விருப்பத்தையும், அடுத்தடுத்த சுற்றுகளில் இடத்தை உயர்த்தித் தேர்வு செய்ய 'Float' விருப்பத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மருத்துவக் கல்லூரிகளின் இடங்களை நேரடியாகச் சரிபார்க்கும் வகையில், தேசிய மருத்துவ ஆணையம் (NMC) நேரடியாக MCC கலந்தாய்வு தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் போலி அல்லது ஒரே இடம் இருமுறை பதிவு செய்யப்படுவது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை
உதவித்தொகை முரண்பாடுகள் & உச்ச நீதிமன்ற விசாரணை
கிளினிக்கல் மற்றும் கிளினிக்கல் அல்லாத பாடப்பிரிவு மருத்துவர்களிடையே நிலவும் உதவித்தொகை முரண்பாடுகளை மாநில அரசுகள் சீரமைக்க வேண்டும் என்றும், கிராமப்புறச் சேவைக்கு வரும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.
இவ்வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சத்தியம் சிங் ராஜ்புத், "பெர்சன்டைல் அமைப்பிலிருந்து ரேங்க் முறைக்கு மாறுவது தகுதியுடைய மாணவர் சேர்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா?" என்று கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.