சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி; ஜார்கண்டில் பாஜகவுக்கு பின்னடைவு
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 10:50 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணி 221 இடங்களிலும், மஹா விகாஸ் அகாதி (எம்விஏ) 55 இடங்களிலும் முன்னிலை வகித்தது. ஜார்கண்டில், இண்டி கூட்டணி 51 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 28 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிராவில் நவம்பர் 20ஆம் தேதியும், 81 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்டில் நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதியும் வாக்களிக்கப்பட்டது. முன்னதாக, மகாராஷ்டிராவில் தொங்கு சட்டசபை அமையயும் எனவும், ஜார்கண்டில் பாஜக வெல்லும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், அவை பொய்யாகி உள்ளன.
2024 இடைத்தேர்தல் முடிவுகள்
இரு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கையுடன், இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக இடைத்தேர்தல் நடைபெற்றது. பிரியங்கா காந்தி வதேரா போட்டியிடும் கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நான்டெட் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி யாரும் எட்டமுடியாத உயரத்தில் முன்னிலை வகிக்கிறார்.