பாபர் மசூதி போன்ற தலைப்புகளை பள்ளி புத்தகங்களில் இருந்து நீக்கியது சரியே: NCERT தலைவர் வாதம்
இந்தியா: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின்(NCERT) இயக்குநரான தினேஷ் பிரசாத் சக்லானி, பள்ளி பாடப்புத்தகங்களில் காவி நிறம் பூசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார். குஜராத் கலவரம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு போன்ற தலைப்புகள் பள்ளி புத்தகங்களில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது. இது பள்ளி புத்தங்களை ஹிந்துத்துவாவுக்கு ஆதரவாக மாற்றும் செயல் என்று பலர் குற்றம்சாட்டி இருந்தனர். மேலும், தற்போதைய புத்தகங்களில் பாபர் மசூதி என்ற பெயர் குறிப்பிடப்படாமல் அதற்கு பதிலாக "மூன்று குவிமாடம் கொண்ட அமைப்பு" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த NCERT தலைவர் சக்லானி, "நாங்கள் வன்முறை மற்றும் மனச்சோர்வடைந்த நபர்களை அல்ல நேர்மறை குடிமக்களை உருவாக்க விரும்புகிறோம்," என்று கூறியுள்ளார்.
"சிறு குழந்தைகளுக்கு வன்முறை குறித்த பாடங்கள் எதற்கு?": சக்லானி
வன்முறை குறித்து ஏன் பாடம் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "மாணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில், சமூகத்தில் வெறுப்பை உண்டாக்கும் வகையில், வெறுப்புக்கு ஆளாகும் வகையில் மாணவர்களை உருவாக்குவது தான் கல்வியின் நோக்கமா? சிறு குழந்தைகளுக்கு, இதுபோன்ற கலவரம் பற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டுமா... அவர்கள் வளரும்போது, தேவையென்றால் அவர்கள் தனியாக அதை கற்றுக்கொள்ளலாம். அது ஏன் பள்ளி பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட வேண்டும்" என்று அவர் PTI செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். "அவர்கள் வளரும்போது என்ன நடந்தது மற்றும் ஏன் நடந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும். மாற்றங்கள் வேண்டும் என்று பள்ளி மாணவர்களிடம் அழுவது பொருத்தமற்றது," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.