
ஒடிசாவில் அக்னிவீர் ஆட்சேர்ப்பில் மோசடி; தேர்வர்களிடம் லஞ்சம் வாங்கிய கடற்படை வீரர்கள் உள்ளிட்ட மூவர் கைது
செய்தி முன்னோட்டம்
2024 நவம்பரில் நடைபெற்ற ஆட்சேர்ப்பு முகாமின் போது அக்னிவீர் தேர்வர்களிடமிருந்து பணம் பெற்றதாகக் கூறப்படும் இரண்டு கடற்படை வீரர்கள் உட்பட மூன்று நபர்களை ஒடிசா காவல்துறை கைது செய்துள்ளது.
ஐஎன்எஸ் சில்காவின் லெப்டினன்ட் கமாண்டர் அத்விதியா சிங் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்தமான் நிக்கோபாரில் உள்ள ஐஎன்எஸ் கேசரியில் பணியாற்றும் சத்யம் சாஹர், ஐஎன்எஸ் சில்காவில் பணியாற்றும் வினய் குமார் ரே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், உத்தரபிரதேசத்தில் வசிக்கும் பூசன் என்ற ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மூவர் மீதும் மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு
ஆட்சேர்ப்பில் உதவி
குர்தா காவல் கண்காணிப்பாளர் சாகரிகா நாத் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேலை தேடுபவர்களுக்கு போலீஸ் சரிபார்ப்பு, உடல் பரிசோதனைகள் மற்றும் கடற்படையில் ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் உதவுவதாக உறுதியளித்து, அதற்கு ஈடாக பெரும் தொகையைப் பெற்றனர்.
இந்த மோசடியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு நபர்களை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.
விசாரணையில் பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் வங்கி ஆவணங்கள் உட்பட குறிப்பிடத்தக்க நிதி ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 12 வங்கிக் கணக்குகளை போலீசார் இதுவரை முடக்கியுள்ளனர்.
எந்தவொரு தேர்வரும் சட்டவிரோத வழிகளில் சேர்க்கை பெற்றுள்ளாரா என்பதை மறுபரிசீலனை செய்ய கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியின் முழு நோக்கத்தையும், அதில் சம்பந்தப்பட்ட வலையமைப்பையும் வெளிக்கொணர மேலும் விசாரணை நடந்து வருவதாக நாத் உறுதிப்படுத்தினார்.