கொரோனா தயார்நிலையைச் சரிபார்க்க இன்று முதல் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி
செய்தி முன்னோட்டம்
கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அவசரகாலத் தயார்நிலையை சரிபார்ப்பதற்கு இன்றும் நாளையும் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஹரியானாவின் ஜஜ்ஜாரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்(எய்ம்ஸ்) ஒத்திகை பயிற்சியை மேற்பார்வையிடுவார்.
கடந்த வார ஆலோசனை கூட்டத்தில் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சுகாதார வசதிகளின் தயார்நிலையை சரிபார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
புதிய கொரோனா மாறுபாடுகள் வந்தாலும், கொரோனாவின் ஐந்து அடுக்கு உத்தியை(சோதனை செய்தல், தடமறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுதல்) பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அப்போது கூறி இருந்தார்.
இந்தியா
அமைச்சர் மாண்டவியா இதுவரை பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறி இருப்பதாவது:
கொரோனாவை சமாளிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது. ICU படுக்கைகள், ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் பிற முக்கியமான பராமரிப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளன. இந்த தயார்நிலை குறித்து வாராந்திர மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றுநோயின் நான்காவது அலை வந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த அதிகமான கொரோனா பரவல் ஒமிக்கிறானின் BF.7 துணை மாறுபாடுகளாலும் XBB1.16 கொரோனா மாறுபாட்டாலும் ஏற்பட்டுள்ளது. ஆனால், அமைச்சகத்தின் அனுபவத்தில், துணை மாறுபாடுகள் மிகவும் ஆபத்தானவை அல்ல.
கடந்த சில நாட்களாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோவிட்-19 அதிகரித்து வருவதால், பல மாநிலங்கள் மீண்டும் முகக்கவசங்களை கட்டாயமாக்கியுள்ளன. மற்ற மாநிலங்கள் எச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.