அடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு
கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கொரோனா சிகிச்சைக்கு தேவையானவை தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார். மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் முதன்மை செயலாளர்களுடனான சந்திப்பின் போது, இன்ஃப்ளூயன்ஸா, கடுமையான சுவாச தொற்று(SARI) போன்ற பாதிப்புகளின் போக்குகளைக் கண்காணிக்க வேண்டும் என்று மாண்டவியா வலியுறுத்தினார். மருத்துவமனை வசதிகள் அனைத்தும் தயார்நிலையை இருக்க வேண்டும் என்று கூறிய அவர், ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் மாநிலங்கள் அனைத்திலும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா ஒத்திகை பயிற்சி நடத்தபட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்பு ஏற்படுத்தப்பட வேண்டும்
ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சுகாதாரத் தயார்நிலையை மதிப்பாய்வு செய்யுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று உள்ளவர்களிடம் இருந்து எடுக்கப்ட்ட மாதிரிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்பு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். முன்பு கொரோனா பரவிய போது எப்படி மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து செயல்பட்டதோ அதே போல் இப்போதும் மாநிலங்கள் ஒத்துழைப்பை தர வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் கேட்டு கொண்டார்.