7 நாட்களில் 3 மடங்கு அதிகரித்த கொரோனா: மத்திய சுகாதார அமைச்சர் இன்று ஆலோசனை
கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கோவிட் நிலைமை குறித்து விவாதிக்க மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று(ஏப்-7) நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் NTGAI (நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு) அதிகாரிகளுடன் ஆன்லைனில் இந்த கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. நேற்று இந்தியா 5,335 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்ததிருக்கிறது. 195 நாட்களுக்கு பிறகு கொரோனாவின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. செயலில் உள்ள கொரோனாவின் எண்ணிக்கை 25,587ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகளை இந்தியா பதிவு செய்திருந்தது.
அதிக கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ளும் கேரளா
கேரளா, டெல்லி, ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் கொரோனா அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு வாரமும் கொரோனா பாதிப்புகள் இரட்டிப்பாகி கொண்டிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு செய்தியில் கூறியுள்ளது. கடந்த வாரத்தில் (மார்ச் 30-ஏப்ரல் 5), 26,361 புதிய பாதிப்புகளை இந்தியா பதிவு செய்துள்ளது. அதற்கு முந்தைய வாரம் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 13,274ஆக இருந்தது. ஆனால், கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஒரே வாரத்தில் மூன்று மடங்கு அதிகரிப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, கேரளா மாநிலம் மஹாராஷ்டிராவை விட அதிக கொரோனா பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.