அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை தண்டனை: உயர் நீதிமன்ற உதவியை நாடியுள்ள குடும்பத்தினர்
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் இன்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நம்பள்ளியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். விசாரணை முடிந்ததும் அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உடனடியாக உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் அல்லு அர்ஜுனின் குடும்பத்தினர். அவசர வழக்காக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது எனவும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வரும்வரை நீதிமன்ற காவல் உத்தரவு ஒத்தி வைக்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 'புஷ்பா 2: தி ரைஸ்' இன் பிரீமியர் காட்சியில் கூட்ட நெரிசல் சிக்கி 39 வயது பெண் உயிரிழந்ததும் மற்றும் அவரது மைனர் மகன் படுகாயம் அடைந்ததும் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்
Twitter Post
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தயார்
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதியின் கணவர் தற்போது வழக்கை வாபஸ் பெற தயாராகிவிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரேவதியின் கணவர் பாஸ்கர், "என் மகன் படம் பார்க்க ஆசைப்பட்டதால் சந்தியா தியேட்டருக்கு அழைத்துச் சென்றேன். அங்கு அல்லு அர்ஜுன் வந்தார். அதில் அவரது தவறில்லை. வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறோம். நான் மருத்துவமனையில் இருந்தபோது அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட செய்தியை நான் பார்த்தேன். அந்த சம்பவத்திற்கும் அவர் திரையரங்கிற்கு வருவதற்கும் சம்மந்தம் இல்லை. நான் வழக்கை வாபஸ் வாங்க தயாராக இருக்கிறேன்" என்றார்.
வலுக்கும் கண்டனங்கள்
அல்லு அர்ஜுன் கைதிற்கு எதிராக ஆந்திர திரையுலகம் மற்றும் அவரது ரசிகர்கள் கண்டங்களை எழுப்பி வருகின்றனர். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது, அவரது இல்லத்திற்கு விரைந்தார் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த வழக்கில் அரசின் தலையீடு இருக்காது எனவும், சட்டம் தனது கடமையை செய்யும் எனவும் கூறினார். அதே வேளையில் ஆந்திராவின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தனியார் விமானம் மூலம் அல்லு அர்ஜுன் இல்லத்திற்கு விரைந்துள்ளார்.