தமிழகத்தில் 2.80 லட்சம் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் மின் கட்டண உயர்வை எதிர்த்து 2.80 லட்சம் நிறுவனங்கள் இன்று உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏதேனும் சலுகைகளை அறிவிக்கலாமா என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மின்கட்டண உயர்வுக்கு எதிராகவும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஓராண்டுக்கும் மேலாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழகத்திற்கு ரூ.1,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு
அதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி இன்று தமிழகத்தில் இயங்கும் 2.80 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையில், கடந்த செப்.23ஆம் தேதி தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் மின் கட்டண முறைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றியமைத்து உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அப்போது தமிழக முதல்வர் பிறப்பித்த உத்தரவிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை என்று கூறப்படுகிறது. அதனால்தான், இன்று 2.80 லட்சம் நிறுவனங்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளன. மேலும், இந்த போராட்டத்தினால் தமிழகத்திற்கு ரூ.1,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.