தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு
தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 66 லட்சமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. அரசாங்க வேலை வேண்டும் என்று எண்ணுவதாலேயே இந்த எண்ணிக்கையானது உயர்ந்துக்கொண்டே செல்கிறது. கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரையிலான நிலவரப்படி தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 66 லட்சத்து 85 ஆயிரத்து 537ஆக இருக்கிறது. இதில் பதிவுசெய்துள்ள ஆண்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 7 ஆயிரத்து 600 பேர். பெண்களின் எண்ணிக்கையானது 35 லட்சத்து 77 ஆயிரத்து 671 பேர் என்று உள்ளது. இவர்களையடுத்து மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 266ஆக உள்ளது. இதில் வேலைக்காக காத்திருப்போரை வயது வாரியாகவும் பிரித்துள்ளனர்.
வயது வாரியான வேலைவாய்ப்பிற்கு காத்திருப்போருக்கான எண்ணிக்கை விவரங்கள்
அதன்படி 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் மட்டும் 17 லட்சத்து 65 ஆயிரத்து 888 பேர் உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த கணக்கீடு 10 மற்றும் 12ம்வகுப்பு முடித்ததுடன் பதிவுச்செய்ததன் அடிப்படையில் இந்த புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 19வயது முதல் 30வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி பட்டபடிப்பினை பதிவுச்செய்ததன் அடிப்படையில் எண்ணிக்கை 28 லட்சத்து 43 ஆயிரத்து 792ஆக உள்ளது. இதனையடுத்து 31 முதல் 45வயது வரை உள்ளோர் எண்ணிக்கை 18 லட்சத்து 32 ஆயிரத்து 990 பேர் உள்ளனர். 46வயது முதல் 60வயது வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 756 பேர் உள்ளனர். தொடர்ந்து 60 வயதுக்குட்பட்ட 6 ஆயிரத்து 111 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.