$10 பில்லியன் அளவு ஏற்றுமதி இலக்கு.. பிரதமருடன் வால்மார்ட் சிஇஓ சந்திப்பு!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருக்கிறார் வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டக் மெக்மில்லன். 2027-ல் இந்தியாவிலிருந்து வருடத்திற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு ஏற்றுமதியை உயர்த்துவது குறித்து இந்த சந்திப்பில் அவர் உரையாடியதாகத் தெரிகிறது. இந்தியாவின் தனித்துவமான சப்ளையர் அமைப்பு குறித்தும் அவர் புகழ்ந்து பேசியிருக்கும் அவர், 10 பில்லியன் டாலர் என்ற ஏற்றுமதி அளவை எட்ட இந்த சப்ளையர் அமைப்பு மிகவும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடிக்கு நன்றி கூறும்போது, "10 பில்லியன் டாலர்கள் அளவு ஏற்றுமதி என்ற இலக்கை நோக்கி உழைத்துக் கொண்டிருக்கிறோம். விளையாட்டுப் பொருட்கள், கடல்சார் உணவுகள் மற்றும் இதர பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவை முன்னணி சந்தையாக்குவோம்" எனத் தெரிவித்துள்ளார் மெக்மில்லன்.
வால்மார்டின் திட்டம் என்ன?
முன்னதாக இந்தியாவில் தாங்கள் முன்னெடுக்கும் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து சப்ளையர்கள், வணிகர்கள், ஆர்டிசன்கள் மற்றும் எம்.எஸ்.எம்.ஈ-க்குளுடன் டக் மெக்மில்லன் மற்றும் வால்மார்ட் இன்டர்நேஷனலின் சிஇஓவான ஜூடித் மெக்கென்னன் ஆகியோர் உரையாடியிருக்கின்றனர். இந்தியாவில் உள்ள சப்ளையர்கள் மற்றும் பார்ட்னர்கள் தரமான, நீண்ட காலம் உழைக்கக்கூடிய அதே நேரம் குறைவான விலை கொண்ட பொருட்களைத் தயாரிக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் இதர செயல்பாடுகள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு தங்களுடைய நிறுவனமும் சிறிய பங்காற்றுவது குறித்து பெருமைகொள்வதாகத் தெரிவித்திருக்கிறார் ஜூடித் மெக்கென்னன்.