அமைப்பாளர் சதத்ரு தத்தா கைது; லியோனல் மெஸ்ஸி நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்திற்கான காரணம் இதுதானா?
செய்தி முன்னோட்டம்
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் கொல்கத்தா வருகையைச் சீர்குலைத்த நிர்வாகக் குறைபாடு மற்றும் அதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட வன்முறைக் குழப்பம் தொடர்பாக, நிகழ்வின் முக்கிய அமைப்பாளரான சதத்ரு தத்தாவை கொல்கத்தா காவல்துறை கைது செய்துள்ளது. அர்ஜென்டினாவின் கால்பந்து ஐகானை நேரில் காண, சால்ட் லேக் மைதானத்தில் அதிகப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள், மெஸ்ஸியைச் சரியாகப் பார்க்க முடியாததால் ஆத்திரமடைந்ததைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காரணங்கள்
குழப்பத்திற்கு முக்கியக் காரணங்கள்
லியோனல் மெஸ்ஸியின் வருகை பரபரப்பான விளம்பரத்துடன் தொடங்கியிருந்தாலும், மைதானத்தில் நிலைமை விரைவில் மோசமடைந்தது. கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட முக்கியக் காரணங்களாகக் கூறப்படுவன:- மைதானத்தில் அமைச்சர்கள், கிளப் அதிகாரிகள், முன்னாள் வீரர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் என விஐபிக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இவர்கள் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரொட்ரிகோ டி பால் ஆகியோரைச் சுற்றி ஒரு அடர்த்தியான வளையத்தை உருவாக்கியதால், ஸ்டாண்டுகளில் இருந்த ரசிகர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு முற்றிலும் தடைபட்டது. அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியும், பார்வையாளர்கள் மெஸ்ஸியை ஒருமுறை கூடத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டிய அமைப்பாளர்கள், மெஸ்ஸியுடன் புகைப்படங்கள் எடுப்பதிலும் கையெழுத்து வாங்குவதிலும் கவனம் செலுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
வன்முறை
வன்முறைச் சம்பவங்கள்
மைதானத்தில் நெரிசல் அதிகமானதால், மெஸ்ஸி உட்பட மற்ற வீரர்களும் அசௌகரியத்துடன் காணப்பட்டனர். இதன் காரணமாக, அவர்கள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வீரர்களின் முன்கூட்டிய புறப்பாடு, ரசிகர்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. இதனால், கூட்டத்தில் ஒரு பிரிவினர் மைதானச் சொத்துக்களைச் சேதப்படுத்தினர். ஆத்திரமடைந்த ரசிகர்கள் பாட்டில்கள் மற்றும் நாற்காலிகளை வீசியெறிந்ததோடு, மைதானத்துக்குள் நுழைந்து கோல்போஸ்டையும் சேதப்படுத்தினர்.
மன்னிப்பு கோரிக்கை
முதல்வர் மன்னிப்பு கோரி பதிவு மற்றும் அமைப்பாளர் கைது
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்து, மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரினார். அத்துடன், இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்தார். இந்தக் குழப்பத்தின் நேரடி விளைவாக, நிகழ்வின் முக்கிய அமைப்பாளரான சதத்ரு தத்தா மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது. காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜி ஜாவித் ஷமீம் அளித்த பேட்டியில், சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தினார். அத்துடன், டிக்கெட் பணம் ரசிகர்களுக்குத் திருப்பி வழங்கப்படுவதை உறுதி செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.