பேருந்துகளுக்கு தடை, செயற்கை மழை- காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசின் திட்டம்
டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால், டெல்லிக்குள் வரும் சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் BS-VI பேருந்துகளை தவிர, மற்ற அனைத்து பேருந்துகளுக்கும் தடை விதிக்க டெல்லி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நவம்பர் 18-20 ஆம் தேதி வரை எதிர்பார்த்தது போல் மழைப்பொழிவு இருக்காது என்பதால், செயற்கை மழையும் உண்டாக்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. "சத் பூஜை வர இருப்பதால் மக்கள் நெருக்கடி அதிகமாக ஏற்படும் என்பதால், அந்த பூஜை முடிந்ததும் தடையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்" என ஒரு அதிகாரி கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது "கிரடிட் ரெஸ்பான்ஸ் ஆக்சன் ப்ளான் -4" படி லாரிகள் மட்டுமே டெல்லி நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் டெல்லி நகருக்குள் வர தடை
ஜூலை 1 ஆம் தேதி முதல், டெல்லி நகருக்குள், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்களிலிருந்து வரும் பேருந்துகளில், சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் BS-VI பேருந்துகள் மட்டுமே டெல்லி நகருக்குள் அனுமதிக்கப்படும் என, டெல்லி போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து மாநிலங்களிலிருந்து வரும் பேருந்துகளுக்கு, இந்த விதிகளை அமல்படுத்தவும் திட்டமிருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டங்களை செயல்படுத்த 40 குழுக்கள், டெல்லி எல்லையில் இரவு 8 மணி முதல் காலை 4 மணி வரை, பணியமர்த்தப்பட உள்ளனர்.
செயற்கை மழை உருவாக்க தயாராகும் டெல்லி அரசாங்கம்
'மேற்கத்திய இடையூறு' ஏற்கனவே கணிக்கப்பட்ட நாட்களில் டெல்லியை நோக்கி வராததால், செயற்கை மழை உண்டாக்கும் டெல்லி அரசின் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலில் நவம்பர் 20 ஆம் தேதிக்கு பின்னர் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருந்த நிலையில், தற்போது நவம்பர் 18-20 தேதிகளில் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. 'மேற்கத்திய இடையூறு என்பது, மத்திய தரைக் கடல் பகுதியில் உருவாகி 9,000 கிலோமீட்டர் தொலைவு பயணித்து, குளிர்காலத்தில் வட இந்தியாவிற்கு மழைப்பொழிவை உண்டாக்கும் சூறாவளி புயல்களாகும். செயற்கை மலையை உருவாக்க, அப்பகுதியில் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்பதால், மேற்கத்திய இடையூறு கொண்டு வரும் மழை அதை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.