மோர்பி பால விபத்து: ஓரேவா குழும நிர்வாக இயக்குநருக்கு எதிராக தீர்ப்பு
ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக்பாய் படேல், கடந்த ஆண்டு மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 135 பேரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் இன்று(பிப் 22) உத்தரவிட்டது. மேலும், சம்பவத்தின் போது காயமடைந்த 56 பேருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சுவர் கடிகாரங்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனமான அஜந்தா பிராண்டின் கீழ்வரும் ஓரேவா குழுமத்திற்கு, பழமையான மோர்பி தொங்கு பாலத்தை சீரமைப்பது மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.
குஜராத் அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு
கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி இடிந்து விழுந்த மோர்பி தொங்கு பாலத்தின் பழுது, பராமரிப்பு மற்றும் இயக்கத்தில் பல குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் குஜராத் அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவால்(SIT) கண்டறியப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கான அறிக்கையை அந்த குழு சமீபத்தில் சமர்ப்பித்தது. பாலத்தின் கேபிளில் ஏறக்குறைய பாதி ஒயர்களில் அரிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் பழைய சஸ்பெண்டர்கள் புதியவற்றால் வெல்டிங் செய்யப்படிருக்கிறது என்றும் அந்த விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுவே பாலம் சரிந்து விழ வழிவகுத்த சில முக்கிய காரணங்களாகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.