மோர்பி பால விபத்து: ஓவேரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
குஜராத்தின் மோர்பியில் அக்டோபர் மாதம் இடிந்து விழுந்து 135 பேரைக் கொன்ற விபத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அய்சுக் படேல் இன்று(ஜன 31) உள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரைக் கைது செய்வதற்கான வாரண்ட் சென்ற வாரம் வெளியானது. இந்த சம்பவம் நடந்ததில் இருந்து படேல் தலைமறைவாக இருந்தார் என்று கூறப்பட்டது. மேலும், கைது செய்வதை தவிர்க்க ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்திருந்தார். சுவர் கடிகாரங்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனமான அஜந்தா பிராண்டின் கீழ்வரும் ஓரேவா குழுமத்திற்கு, பழமையான மோர்பி தொங்கு பாலத்தை சீரமைப்பது மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.
தடவியல் சோதனையில் வெளிவந்த தகவல்கள்
மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) ஓரேவா குழுமத்தின் பல குறைபாடுகளை மேற்கோள் காட்டியுள்ளது. தரமற்ற பராமரிப்பு, பாலத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தத் தவறியது மற்றும் டிக்கெட்டுகளை தடையின்றி விற்பனை செய்தது போன்ற குற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. துணை ஒப்பந்ததாரர்கள், டிக்கெட் எழுத்தர்களாக பணிபுரிந்த தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் உட்பட, ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒன்பது பேருடன் படேல் 10வது குற்றவாளியாக பட்டியலிடப்பட்டிருந்தார். துருப்பிடித்த கேபிள்கள், உடைந்த நங்கூரம் மற்றும் தளர்வான போல்ட் ஆகியவை சீரமைப்பின் போது மாற்றப்படவில்லை என்பது தடயவியல் சோதனைகளில் தெரியவந்துள்ளது. மேலும், பாலத்தை பொதுமக்களுக்கு திறப்பதற்கு முன்பு அதன் சுமை தாங்கும் திறனை மதிப்பிடுவதற்கு எந்தவொரு நிபுணர் குழுவும் நியமிக்கபடவில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது.