தொங்குபால விபத்து நடந்த மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது: குஜராத் அரசு நோட்டீஸ்
கடந்த அக்டோபரில் மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக்கூடாது என்று குஜராத் அரசு மோர்பி நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர் மற்றும் 56 பேர் காயமடைந்தனர். இதனால், "தனது கடமையை செய்ய தவறிய" மோர்பி நகராட்சியிடம் காரணம் கேட்டு குஜராத் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு வரும் 25ஆம் தேதிக்குள் பதலளிக்குமாறு உத்தரவும் போடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறையால் புதன்கிழமை(ஜன:18) மோர்பி நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. ஏற்கனவே, இந்த வழக்கை ஏற்று நடத்தி வந்த குஜராத் உயர்நீதிமன்றத்தில் மோர்பி நகராட்சியை கலைக்கப்போவதாக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, தற்போது இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நகராட்சியைக் கலைக்க அரசுக்கு உரிமை இருக்கிறது
ஒரு நகராட்சி திறமையற்றதாக கண்டறியப்பட்டால் அதை கலைக்கும் முழு அதிகாரமும் மாநில அரசுக்கு உள்ளது என்கிறது நகராட்சிகள் சட்டத்தின் 263வது பிரிவு, என்றும் இந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. "குஜராத் நகராட்சிகள் சட்டப்படி(1963), மோர்பி நகராட்சி தனது கடமைகளைச் செய்யத் தவறியதாகத் தெரிகிறது. மோர்பி நகராட்சியால் அதன் கடமைகளைச் செய்ய முடியவில்லை. எனவே, நகராட்சியில் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவு அதன் முதன்மையான கடமைகளை நிறைவேற்றத் தகுதியற்றது." என்று மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "மோர்பி நகராட்சியின் கவுன்சிலர்களுடன் நாங்கள் இந்த விஷயத்தை ஆலோசித்து வருகிறோம், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம்" என்று இதை பெற்று கொண்ட மோர்பி நகராட்சியின் தலைவர் குசும் பர்மரின் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.