"இந்திய மக்களால் தான் இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது"- மோடி
இந்த 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தும், அடுத்து இந்தியாவின் இலக்கு குறித்தும் நாட்டு மக்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார். 2014-ல் தான் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட போது, உலகின் பெரிய பொருளாதாரங்களின் பட்டியலில் 10வது இடத்தில் இந்தியா இருந்ததாகவும், இந்திய மக்களின் உதவியுடன் இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர். 2047-ம் ஆண்டு இந்தியா 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.
விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார் மோடி:
இந்திய பொருளாதார வளர்ச்சியில் நாட்டு இளைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர் மோடி, அவர்களால் தான் ஸ்டார்ட்அப் தொழிற்துறையில் உலகில் முதல் மூன்று இடங்களில் இந்தியா இருப்பதாகத் தெரிவித்துள்ளார் பிரதமர். மேலும், இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது விஸ்வர்மா திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி. நாட்டின் திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்காக இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். இந்த திட்டத்திற்காக ரூ.13,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை நிதியை ஒதுக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. அடுத்த மாதம் 17-ம் தேதி (செப்டம்பர் 17) விஸ்வகர்மா ஜெயந்தி தினத்தன்று, இந்தத் திட்டம் நாடு முழுவதும் தொடங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.