குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்கா ஜனாதிபதிக்கு அழைப்பு
ஒவ்வொரு ஆண்டும், இந்தியா தனது குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உலக தலைவர்களை அழைப்பது வழக்கம். அதன்படி, 2024 ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி. இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் நடைபெற்ற அவர்களின் இருதரப்பு சந்திப்பின் போது, இந்த அழைப்பு விடுக்கப்பட்டது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறினார். ஏற்கனவே, குடியரசு தினத்திற்கு, நாற்கர பாதுகாப்பு உரையாடல்(QSD) அல்லது குவாட் நாடுகளின் தலைவர்களை அழைப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாக, செய்திகள் ஊகித்தன. தற்போது, அமெரிக்க பிரதமருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது, இருநாட்டின் ஆழமான உறவை பிரதிபலிக்கிறது.
குவாட் உச்சிமாநாடு
இந்தியா அடுத்த ஆண்டு குவாட் உச்சிமாநாட்டை நடத்த உள்ளது என செய்திகள் வெளியாகின, இருப்பினும் அதிகாரபூர்வமாக இது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இந்தியாவின் குடியரசு தினத்தின் அதே நேரத்தில் இந்தியாவில் குவாட் உச்சிமாநாடு திட்டமிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது, கார்செட்டி அது பற்றி தனக்குத் தெரியாது என்று கூறினார். பைடனை அழைக்கும் போது பிரதமர் மோடி, குவாட் பற்றி குறிப்பிடவில்லை என்றார். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். COVID-19 தொற்றுநோய் காரணமாக , 2021 மற்றும் 2022 இல் தலைமை விருந்தினர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது