
ஜி20 மாநாடு: புதுடெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தார் பிரதமர் மோடி!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில், இந்தியா தலைமை தாங்கி நடத்தும் 2023ம் ஆண்டிற்கான ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த உச்சமாநாட்டின் முக்கியமா நிகழ்வாகக் கருதப்படும் புதுடெல்லி பிரகடனத்தினை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.
இன்றைய ஜி20 மாநாட்டின் கருப்பொருளான 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளின் கீழ் உரையாற்றினார் பிரதமர் மோடி.
"மனித வளர்ச்சியை மையமாகக் கொண்ட உலகமயமாக்கலுக்கு இது ஒரு பொற்காலம் எனவும், அந்த இலக்கை நோக்கியே பிரதமர் மோடி ஓய்வின்றி இயங்கி வருவதாகவும்", இந்த ஜி20 மாநாட்டின் இந்திய ஷேர்பாவான அமிதாப் காண்ட் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜி20 மாநாடு
ஏற்றுக் கொள்ளப்பட்ட புதுடெல்லி பிரகடனம்:
இன்றைய ஜி20 மாநாட்டில் பல்வேறு உலகளாவிய திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி. அதன்பின்பு பேசிய போது தான், ஜி20 புதுடெல்லிப் பிரகடனத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டதாக அவர் அறிவித்தார்.
மேலும், இதற்காக உழைத்த ஜி20 ஷேர்பாக்கள், அமைச்சர்கள் மற்றும் பிற அரசு அதிகாரிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இன்றைய ஜி20 மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதுடெல்லிப் பிரகடனத்தில், வலிமையான, நிலையான, சீரான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த பிரகடனத்தில் நிலையான எதிர்காலத்திற்காக பசுமை வளர்ச்சி ஒப்பந்தங்கள் மற்றும் 21ம் நூற்றாண்டிற்கான பல்வேறு நாடுகள் இணைந்து ஏற்படுத்தும் பலதரப்பு அமைப்புகளின் உருவாக்கங்கள் குறித்தும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.