மணிப்பூரில் நடந்த பழங்குடியின போராட்டத்தால் இணைய சேவைகள் முடக்கம்
பழங்குடியினர் குழுக்கள் மணிப்பூர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பேரணிகளை நடத்தியதை அடுத்து, மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையைச் சமாளிக்க மணிப்பூர் அரசாங்கம் அடுத்த ஐந்து நாட்களுக்கு மாநிலத்தில் மொபைல் இணையத்தை நிறுத்தி வைத்துள்ளது. பெரிய கூட்டங்களுக்கு தடை விதித்ததோடு, மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' பேரணியில் கலந்துகொண்டனர். இந்த பேரணி மாநிலத்தின் பத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. மணிப்பூரின் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம்(ATSUM), இந்த அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்தது.
மாநிலத்தின் மக்கள்தொகையில் 53% பேர் மெய்த்தே சமூகத்தை சேர்ந்தவர்கள்
"எஸ்டி பிரிவில் சேர்க்கப்பட வேண்டும் என்ற மெய்த்தே சமூகத்தின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு" எதிர்ப்பு தெரிவிக்க இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது என்று இதற்கு அழைப்பு விடுத்த மாணவர் சங்கம் கூறியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் மக்கள்தொகையில் 53% பேர் மெய்த்தே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த சமூகத்தினர், மணிப்பூர் பள்ளத்தாக்கில் வசிப்பதோடு, "மியான்மர் மற்றும் வங்காளதேசியர்களின் பெரிய அளவிலான சட்டவிரோத குடியேற்றத்தால்" அவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர். தற்போதுள்ள சட்டத்தின்படி மலைப்பகுதிகளில் மெய்த்தே சமூகத்தினர் குடியேற அனுமதி இல்லை. இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக தங்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்க்குமாறு அவர்கள் கோரி வருகின்றனர்.