காவிரி விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் வரும் அக்.,9ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது என்று கடந்த மாதம் சபாநாயகர் அப்பாவு அறிவித்த நிலையில், இன்று சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது தொடர்பான தனி தீர்மானத்தினை கொண்டு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தமிழகத்திற்கு இதுவரை 9.19 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டிய நிலையில், இதுவரை 2.18 டி.எம்.சி. தண்ணீர் தான் வந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் - முதல்வர்
அதனைத்தொடர்ந்து அவர், தமிழகத்திற்கு கர்நாடகா முறையாக தண்ணீர் திறந்து விடாமல், செயற்கையான நெருக்கடியினை காவிரி ஆற்றில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று கூறினார். மேலும் அவர், சம்பா பயிர்களை காக்கும் அவசியம் தமிழகத்தில் உள்ள நிலையில், எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்னும் பாகுபாடு இல்லாமல் காவிரி நீருக்காக போராடி வருவதாக தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடகா அரசு பின்பற்றவில்லை என்றும், கடந்த ஜூலை 17ம் தேதி முதல் காவிரியாற்றில் தமிழகத்திற்கான உரிமையினை நிலைநாட்ட மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டு பேசினார். இதனிடையே, சட்ட வல்லுநர்களுடன் இதுகுறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தனது தீர்மானத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.